Saturday, August 9, 2008

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? அத்தியாயம் 2

எல்லாம் தகவல்மயம்.

இன்டர்நெட் பிரபலமாக காரணம் என்னவென்று சற்று யோசித்துப்பார்த்தால் அதில் கொட்டிக்கிடக்கும் தகவல்கள் என்று புரியவரும். மிளகாய் பஜ்ஜி செய்வது முதல் கேலக்ஸில் ஏதோ மூலையில் இருக்கும் கிரகத்தைபற்றிய தகவல் வரை அனைத்து விஷயங்களைப் பற்றியும் இணையத்தில் கிடைக்கும்.

பிரபல எழுத்தாளர் ஒருமுறை இன்டர்நெட்டில் விளையாட்டாக RDX வெடிகுண்டு செய்வது எப்படி? என்று தேட, "முதலில் ஒரு அடி நீளமும் பத்து அங்குல பருமனுள்ள குழாய் ஒன்றை எடுத்துக்‍கொள்ளுங்கள்..." என்று சீரியஸாக விளக்கும் வலைதளத்திற்கு சென்றதாக அதிர்ச்சியுடன் எழுதியிருந்தார்.

குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பது எப்படி, கத்திரிகாய் ஏன் சிலருக்கு ஒப்புகொள்வதில்லை போன்ற எந்த கேள்விக்கும் உங்களால் இன்டர்நெட்டில் விடைகாண முடியும்.


நீங்கள் விரும்பினால் உங்களிடம் உள்ள தகவல்களை வலைதளத்தில் போடலாம். பூண்டு ரசம் செய்வது எப்படி என்று ஓய்வு நேரத்தில் இருக்கும்போது ஒரு குடும்பத்தலைவி வலைபக்கத்தில் பைசா செலவில்லாம் போடமுடியும்.

இதற்கு வலைதளத்தை வடிவ‍மைக்க உதவும் HTML, PHP, JAVA போன்ற எந்த மென்பொருளைப்பற்றியும் தெரியப்தேவையில்லை.


எல்லாம் சரி எதற்கு இந்த தேவையற்ற வேலை என்று கேட்கின்றீர்களா? இணையத்தில் GOOGLE மூலம் பணம் சம்பாதிக்க தகவல்கள்தான் அடிப்படை.

செய்தித்தாள்கள், வாரஇதழ் மாதஇதழ், தொலைக்காட்சி என்று அனைத்து மீடியாக்களும் விளம்பரம் என்னும் வருவாய்யைக் கொண்டுதான் இயங்குகின்றன. மேற்கண்ட உதாரணத்தில் பூண்டு ரசம் செய்வது பற்றிய குறிப்புகள் ‍‍கொண்ட ஒரு வலைபக்கத்தை பார்த்தோம் அல்லவா? அதில் குறிப்பிற்கு பக்கதில் பிரபலமான மசாலா நிறுவனத்தின் விளம்பரத்தை போட்டால் நன்றாக இருக்கும் அல்லவா? அதே நேரத்தில் கட்டுரை எழுதிய அம்மணிக்கும் அந்த விளம்பரம் மூலம் கொஞ்சம் வருமானம் வரவழைக்கலாம்.

உதாரணத்தில் குறிப்பிட்டது போல மேற்கண்ட கட்டுரையை எழுதியவர் ஒரு குடும்பத்த‍லைவி என்பதால் அவரால் மசாலா நிறுவனத்தை தேடிப்பிடித்து விளம்பரம் வாங்கும் பணியை செய்யமுடியாது. அந்த விளம்பரத்திற்கு கட்டணமும் என்னவென்று அவரால் நிர்ணயிக்க முடியாது.
ஆனால் இந்த பணியை அவர் சார்பில் வேறு யாராவது செய்தால்?

நன்றாகக்தான் இருக்கும் ஆனால் யார் செய்வது? எப்படி செய்வார்கள்?. இங்கு GOOGLE வலைதளம் இந்த பணியையும் உங்களுக்காக செய்து தர தயாராக இருக்கின்றது.

எப்படி என்று தெரிந்துகொள்வதற்கு முன் இணையத்தில் பணம் சம்பாதிக்க நாம் என்ன செய்யப்போகிறோம் என்று ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1. நமக்கு தெரிந்த,படித்த பயனுள்ள தகவல்களை (ஆங்கிலத்தில்) TYPE செய்யவேண்டும்

2. ஒரு வலைதளத்தை நிறுவி அதில் அந்த தகவல்களை போட வேண்டும்.

3. நம் சார்பில் மேற்கண்ட தகவல்களுக்கு பக்கத்தில் தகவல் சார்ந்த நிறுவனங்களின் விளம்பரங்களை போடவும், மேற்கண்ட விளம்பர வருவாயை நமக்கு அனுப்பி வைக்கவும் GOOGLE நிறுவனத்தை கேட்டுக் கொள்ளப்போகிறோம்.

ஒரு வழியாக நாம் முதலில் செய்ய வேண்டிய‍வைகளுக்கான பட்டியல் தயார். மிக சுலமாக மேற்கண்ட பணிகளை எப்படி செய்வது என்று இனி வரும் கட்டுரைகளில் பார்ப்போம்.

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? அத்தியாயம் 1

GOOGLE நிறுவனம் பல்வேறு வகையான சேவைகள் மூலம் வருவாய் ஈட்டினாலும் அதன் பிரதான வருவாய் களமாக விளங்குவது விளம்பரதாரர்கள் மூலம் கிடைக்கும் வருவாயாகும்.(இந்த சேவைக்கு ADWORDS என GOOGLE பெயரிட்டுள்ளது). உதாரணமாக ஒருவர் சந்தையில் கி‍டைக்கும் புதிய TV க்களை பற்றி இணையத்தில் தெரிந்து கொள்ள நினைத்து GOOGLE தளத்தில் "TV" என்று தேடுகிறார் எனில் அவருக்கு இணையத்தில் உள்ள பல நூறு கோடி வலைதளங்களில் புதிய தொலைகாட்சி பெட்டி பற்றிய தகவல் எங்கும் இருந்தாலும் உடனே அதனை அழகாக வரிசைபடுத்தி கொடுத்துவிடும்.


இவ்வாறு தேடுபவர்களின் தேவைக்கேற்ப இணையத்தில் இருந்து எந்த தகவலையும் GOOGLE எடுத்து கொடுத்துவிடும். GOOGLE மட்டுமல்லாது பொதுவாக சர்ச் என்ஜின்களின் பணி இதுதான் என்பது நமக்கு தெரிந்தவிஷயம்தான். இவ்வாறு வலைதளங்களை பட்டியலிட GOOGLE அவ்வலைதளங்களிடம் தனிப்பட்ட முறையில் பணம் வசூலிப்பதில்லை. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் படத்தில் வலது புறத்தில் Sponsered Links என்று தலைப்பிட்டு அதன் கீழ் வரிசையாக உள்ள வலைதளங்கள.


இவை அனைத்தும் விளம்பரங்கள்!. இந்த பகுதில் ஒரு நிறுவனம் தனது விளம்பரத்தை வெளியிட விரும்பினால் GOOGLE-லின் ADWORDS எனும் சேவையை பயன்படுத்தி விளம்பரம் அளிக்க வேண்டும்.

பொதுவாக விளம்பரம் என்பது அனைத்து வியாரத்திற்கும் அடிப்படை என்பது நமக்கு நன்றாகவே தெரியும். பற்பசையிலிருந்து தங்கம் முதல் அனைத்தையும் விற்க விளம்பரம் என்பது அவசியம். பொதுவாக விளம்பரங்கள் பத்திரிகைகள், TV சேனல்கள், சுவரொட்டிகள் என்று பல்வேறு ஊடகங்கள் வாயிலாக மக்களை சென்றடைகின்றது.

அவ்வகையில் விளம்பரத்தின் புதிய பரிணாமமாக இணையவழி விளம்பரங்களை சொல்லலாம். அதுவும் GOOGLE ADWORDS மூலம் அளிக்கப்படும் விளம்பரங்கள் விளம்பரம் அளிக்கும் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளது,எப்படி என்று பார்ப்போம்.

தொலைக்காட்சியில் ஒரு ஜவுளி நிறுவனம் தனது புதிய ரக பட்டுபுடவையை பற்றி விளம்பரம் அளிப்பதாக வைத்துக் கொள்வோம். அதனை வாங்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படும் ஆனால் சிறிது நேரத்தில் அவ்விளம்பரத்தை மறந்துவிட்டு அடுத்து வரும் நகை விளம்பரத்தில் கவனம் செலுத்த தொடங்கி விடுவார்கள். இவ்வகை விளம்பரங்கள் பத்தோடு பதினொன்றாக மனதில் ஓரத்தில் பதிந்து பின்னர் எப்போதாவது ஜவுளி வாங்க சொல்லும் போது நினைவு வரலாம் அவ்வளவுதான்.

ஆனால் இணையவழி விளம்பரங்கள் மிகவும் பயனுள்ளவை. நாம் முதலில் சொன்ன உதாரணத்தில் புதிய தொலைகாட்சி பெட்டியை பற்றி ஒருவர் இணையத்தில் தேடுகிறார் என்னில் அவரை சென்றடையும் விளம்பரம் நிச்சயமாக பயனுள்ளதாகவே இருக்கும். அதுமட்டுல்லாமல் இப்போது கடன் அட்டையை பயன்படுத்தி உடனடியாக வியாரத்தை முடிக்கவும் இயலும் என்பதால் பலர் இவ்வகை விளம்பரங்களை கொடுக்க விரும்புகின்றனர்.

எல்லாம் சரிதான் நமக்கு எதற்கு ‍தேவையில்லாத விஷயங்கள் என்று கேட்கிறீர்களா?. அவசியம்தான் ஏனென்றால் நமக்கு மறைமுகமாக GOOGLE மூலம் பணம் தரப்போவது ADWORDS விளம்பரம் அளிக்கும் இவர்கள்தான்!.